துரைப்பாக்கத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 193வது வார்டுக்குட்பட்ட துரைப்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, தேரடி தெரு ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சியாக இருந்தபோது தெருக்களில் பிளாஸ்டிக் குழாய் மூலம் பைப் லைன் அமைத்து பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு குடிநீர் வாரியம் மூலம் தெருக்குழாய் அகற்றப்பட்டு கை பம்ப் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த கைப்பம்புகளில் தண்ணீர் பிடிக்க முதியவர்கள் மற்றும் பெண்கள் சிரமமான நிலை உள்ளதால் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து போஸ்ட் ஆபிஸ் தெரு தவிர மற்ற இடங்களை கை பம்பை அகற்றி விட்டு மீண்டும் குழாய் அமைத்தனர்.

மற்ற தெருக்களை போல் போஸ்ட் ஆபீஸ் தெருவிலும் கை பம்பை அகற்றி விட்டு குழாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போஸ்ட் ஆபீஸ் தெருவில் பைப்லைன் உடைப்பு காரணமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. கருப்பு நிறத்தில் உள்ள இந்த குடிநீர் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ேநற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று குடிநீர் வாரிய 15வது மண்டலப் பகுதி பொறியாளர் கல்யாணி, துணை பகுதி பொறியாளர் ஐயப்பன், உதவி பொறியாளர் கார்த்திக், மாநகராட்சி 193வது வார்டு உதவி ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை சரிசெய்யவும், கை பம்பை அகற்றிவிட்டு குழாய் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும் இப்பகுதியில் உள்ள சில வீடுகளில் இருந்து கழிவுநீர் சாலையில் வெளியேற்றுவதால் கொசுத்தொல்லை அதிகரிப்பதோடு துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கைபம்பை அகற்றிவிட்டு குழாய் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். மேலும் சாலையில் கழிவுநீர் அகற்றும் வீடு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Stories:

>