பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் 15ம் தேதி விசாரணை

சென்னை: சாலையில் பேனர் வைக்கும் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வரும் 15ம் தேதி விசாரணை நடத்தவுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மகன் திருமணம் நடந்தது. இதற்காக சாலையின் நடுவே மணமக்களை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டன. இதில் ஒரு பேனர்  ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் மீது விழுந்தது. இதையடுத்து நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இதையடுத்து பேனர் வைப்பதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 11 மற்றும் 12ம் தேதி நடைபெற்றது.  இதில் இவர்களது வருகையின் போது வரவேற்பு பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மொத்தம் 14 இடங்களில் பேனர் வைக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரிக்க தேவையில்லை. ஏற்கெனவே வைப்பதற்கு விதிமுறைகள் உள்ளது என்று தெரிவி்து வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த நிலையில், மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை கடந்த மாதம் 16ம் தேதி தாக்கல் செய்திருந்தார். அதில்,”சாலைகளில் வைக்கப்படும் பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்களை தொடர்ந்து ஏற்படுத்தியதால் தான் அதற்கு தடை விதித்து ஏற்கனவே உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இந்த தடை என்பது அரசுக்கு பொருந்தாது என குறிப்பிடப்பட்டது. இதுபோன்ற உத்தரவு என்பது தவறான முன் உதாரணம் ஆகும். அதனால் பேனர் வைக்கும் விவகாரத்தில் பாகுபாடு காட்டாமல் ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும்.

இதில் சென்னையில் அதிமுக பிரமுகர் ஒருவர் சாலையில் நடுவே வைத்திருந்த பேனர் விழுந்ததில் தான் நிலைதடுமாறிய சுபஸ்ரீ என்ற பெண் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் வரும் 15ம் தேதி விசாரிக்க உள்ளது. இதில் அதிமுக நிர்வாகி ஜெயகோபாலுக்கு நேற்று தான் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories:

>