தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட பால் மாதிரிகள் சிலவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய 'அப்லாடாக்ஸின் எம்1'வேதிப் பொருள் இருப்பதாக தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட பால் மாதிரிகள் சிலவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய அப்லாடாக்ஸின் எம்1 வேதிப் பொருள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து விரிவாக ஆய்வுசெய்ய தமிழக அரசு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 34 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுபோக தமிழகத்தில் உற்பத்தியாகும் மற்ற பால் தனியார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் பாலின் தரத்தை அறியும் நாடு தழுவிய ஆய்வு ஒன்றை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்தியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 114 நகரங்களில் 551 மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாடாக்ஸின் எம்1 அளவு 88 மாதிரிகளில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் இருந்தது  கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில், உணவுப் பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின், கால்நடைப் பல்கலைக்கழகம் மற்றும் சில ஆய்வு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால்நடைத் தீவனம் மற்றும் பால் மாதிரிகளை சேகரித்து அதில் நச்சுப் பொருட்கள் உள்ளனவா என ஆய்வுசெய்வதே இந்த குழுவின் நோக்கம். இதற்காக மாநிலம் முழுவதும் 135 பால் உற்பத்தி மையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 135 பால் உற்பத்தி மையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  அப்லாடாக்ஸின் எம்1 வேதிபொருள், கால்நடைத் தீவனங்கள் மூலம் பாலில் கலப்பதாக கூறப்படுகிறது.

மாடுகள் உண்ணும் தீவனத்தில் பூஞ்சைகள் இருந்தால் அவை கல்லீரலில் அப்லாடாக்ஸின் பி1 ஆக சேரும். பின் அங்கிருந்து சுரக்கும் பாலில் கலக்கும். அப்போது அப்லாடாக்ஸின் எம்1 ஆக மாறும். பாலில் இது குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கும் போது அருந்துவோரின் உடல்நிலையை பாதிக்கும். அடிக்கடி அருந்தினால் புற்றுநோய் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: