ஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 30 பயணிகள் படுகாயம்

கச்சிகுடா: ஐதராபாத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. கச்சிகுடா ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மீது புறநகர் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. குறைந்த வேகத்தில் இரு ரயில்களும் வந்து மோதியதால் காயங்களுடன் 30 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். ஹைதராபாத்தில் கச்சிகுடா ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கும், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் பயங்கரமாக மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளன. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்திற்கு இன்டர் சிட்டி பயணிகள் ரயில் 4வது பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்தது. அதே 2வது ட்ராக்கில் ஐதராபாத்தில் இருந்து புறநகர் ரயில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சிக்னல் கோளாறின் காரணமாக 2வது பிளாட்பார்மில் செல்லக்கூடிய புறநகர் ரயில் 4வது ட்ராக்கிற்கு மாற்றப்பட்டது.

இதன் காரணமாக இரண்டு ரயில்களும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டது. இதில் புறநகர் ரயிலில் நான்கு பெட்டிகள் சரிந்தது. இதனை தொடர்ந்து இந்த விபத்தில் புறநகர் ரயிலில் இருந்த இன்ஜின் ஓட்டுனர் அதற்குள்ளேயே சிக்கி கொண்டார். அவரை மீட்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. ஓட்டுனருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவருக்கு ஆக்சிஜன் வழங்கும் பணியும், ரயிலினை பெயர்ந்தெடுத்து உள்ளே இருக்கும் இன்ஜின் ஓட்டுனரை வெளியில் கொண்டுவரும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இரு ரயில்களும் கச்சிகுடா ரயில் நிலையத்தில்  குறைந்த வேகத்தில் வந்து கொண்டிருந்ததன் காரணமாக விபத்து பெருமளவில் இன்றி உயிர் சேதமும் குறைந்துள்ளது. இருப்பினும் இந்த விபத்தில் 30 பயணிகள் காயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக கச்சிகுடா ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்து ஏற்பட சிக்னல் காரணமா? அல்லது அங்குள்ள பணியாளர்களின் கவனக்குறைவா? என்பது குறித்து ரயில்வே போலீசார், ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது, முதலில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், இரு ரயில்களும் மோதிக்கொண்ட நிலையில் இன்ஜின் ஓட்டுனரை காப்பாற்றிய பிறகு இரு ரயில்களையும் தண்டவாளத்தில் இருந்து வெளியே கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: