முன்னுரிமை பட்டியலில் ஜீரோ ரேங்க் போட்டதை நீக்காவிட்டால் உண்ணாவிரதம்: முதுநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாறுதல் கவுன்சலிங் முன்னுரிமைப் பட்டியலில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜீரோ ரேங்க் போடப்பட்டுள்ளதால் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  முன்னுரிமைப் பட்டியல் முரண்பாடுகளை களையவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முதுநிலை பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டிய பணியிடமாறுதல் கவுன்சலிங் இந்தாண்டு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பல ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தற்போது பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. இருப்பினும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 2002ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வில் 400 முதுநிலை பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு மேனிலைப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது 2019ம் ஆண்டுக்கான மேனிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பட்டியல்கள் அனைத்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்படி தயார் செய்யப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ரேங்க், பணியில் சேர்ந்த நாள் ஆகிய விவரங்கள் சரியாக உள்ளனவா என்று அந்தந்த ஆசிரியர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி தற்காலிக பட்டியல் பள்ளிக் கல்வி  இயக்குநரால் வெளியிடப்பட்டது. அதில் 8 முதுநிலை ஆசிரியர்களுக்கு தர எண்(ரேங்க்) ஜீரோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் முன்னுரிமைப் பட்டியலில் கடைசியாக வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிக்கு வந்தவர்களுக்கு எப்படி ஜீரோ வரும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங்கின் போது மட்டும் இந்த ரேங்க்கை சரியாக பயன்படுத்தியுள்ள பள்ளிக் கல்வித்துறை முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க  மறுப்பது ஏன். எனவே முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். இல்லை என்றால் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணா விரதம் இருப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: