சார்பதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் ஊழலை மறைக்க சிசிடிவி கேமரா அட்டை வைத்து மறைப்பு?: மண்டல டிஐஜிக்கள் கண்காணிக்க அறிவுரை

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா அட்டை வைத்து மறைக்கப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க மண்டல டிஐஜிக்களுக்கு பதிவுத்துறை ஐஜி அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான அலுவலகங்களில் இடைத்தரகர்களுடன் பதிவுத்துறை ஊழியர்கள் கைகோர்த்து கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்களிடம் இருந்து அரசுக்கும்  பதிவுத்துறைக்கும் ஏராளமான புகார்கள் சென்றது. இதை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.  மேலும் லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் இடைத்தரகர்கள் சர்வ சாதாரணமாக நடமாடியதாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த 6ம் தேதி சென்னை மண்டலத்தில் உள்ள 150 அலுவலகத்தை சாந்தோமில் உள்ள ஐஜி அலுவலகத்தில் இருந்தபடி பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலா சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ததாக  கூறப்படுகிறது. அப்போது, ஒரு சில சார்பதிவாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பதிவு சரியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி நேர்முக உதவியாளர் சுதா மல்லையா அனுப்பியுள்ள செய்தியில், சார்பதிவாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருப்பது வெளிப்படையான பதிவு மற்றும் தேவையில்லாத நபர்கள் உள்ளே  நுழைவதை கண்டறிவதற்காக தான். ஆனால், ஒரு சில சார்பதிவாளர் அலுவலகங்களில் அட்டை வைத்து சிசிடிவி கேமரா மறைக்கப்பட்டுள்ளது. இது சரியான நடைமுறை இல்லை. எனவே, அனைத்து டிஐஜிக்களுக்கு சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் சிசிடிவி கேமரா முறையாக வைக்கப்பட்டுள்ளதா, அந்த அலுவலகங்களில் முறையாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்  என்று அதில் கூறப்பட்டுள்ளது. அப்படி அட்டை போட்டு மூடியிருந்தால் சார்பதிவாளர்கள் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்டல டிஐஜிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: