கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தம்

* விவசாயத்துக்கு நீர் தேவை என ஆந்திர அரசு கைவிரிப்பு * 2.2 டிஎம்சி மட்டுமே வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு தண்ணீர் தேவை என ஆந்திர அரசு கைவிரித்துவிட்டதால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தபடி கண்டலேறு அணையில் இருந்து சென்னை மக்கள் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் தவணை அடிப்படையில் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். முதல் தவணை கால அடிப்படையில், ஜூலை முதல்  அக்டோபர் மாதம் வரை 8 டிஎம்சி வழங்க வேண்டும். இரண்டாவது தவணை காலமான ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.இந்த ஆண்டு வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை சென்னை மக்கள் சந்தித்தனர். கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி தமிழகத்துக்கான தண்ணீரையும் ஆந்திர அரசு தர மறுத்துவிட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான  பூண்டி ஏரி முற்றிலும் வறண்டது.இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தில் பெய்த மழையால் அங்குள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து, தமிழக அமைச்சர்கள் இருவர் ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர். அதை  ஏற்று கடந்த செப்டம்பர் மாதம் 25ம்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு தண்ணீர் திறந்தது. 68 டிஎம்சி கொள்ளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது 40 டிஎம்சி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.

இதனால் தமிழகத்துக்கான 8 டிஎம்சி தண்ணீரை திறந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த தொடர் மழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கியது. எந்த ஒரு ஆண்டும் 8  டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு ஆந்திர அரசு தந்ததில்லை. ஆனால் இந்த முறை 5 டிஎம்சி தண்ணீராவது தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 31ம் தேதி முதல் தவணை காலம் முடிந்த பின்னரும் ஆந்திர அரசு நேற்று  முன்தினம் வரை தண்ணீர் திறந்துவிட்டது.

இதுவரை 2.2 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு தந்துள்ளது. கூடுதலாக 2டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்தது. ஆனால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு திடீரென வெகுவாக குறைந்தது.இதுகுறித்து தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசிடம் கேட்டபோது, பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே ஓரிரு நாளில் தமிழகத்துக்கான தண்ணீர் திறக்கப்படும் என்று கூறினர். இதற்கிடையே ஆந்திர விவசாயிகள் பலர் கிருஷ்ணா  கால்வாயில் அதிக திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்த தண்ணீர் திருட்டில் ஈடுபடுகின்றனர். விவசாயிகள் என்பதால் இந்த தண்ணீர் திருட்டை தடுக்க முடியாமல் இருமாநில அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு வரும் தண்ணீர் அளவு நேற்றைய நிலவரப்படி 182 கன அடியாக குறைந்தது. இந்த தண்ணீரும் ஆந்திராவில் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் உபரி நீராகும். எனவே  பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி தமிழக அதிகாரிகள் தொலைபேசியில் ஆந்திர அதிகாரிகளிடம் பேசியபோது, ‘தற்போது பாசனத்துக்கு தண்ணீர் தேவை என்பதால் தமிழகத்துக்கான தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கண்டலேறு அணையில்  திறக்கப்படும் தண்ணீர் பாசனத்துக்காகவும், காளகஸ்தி, திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக திருப்பி விடப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கான தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கண்டேறு  அணையில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதால் தமிழகத்துக்கான தண்ணீரை தர வேண்டும் என்று ஆந்திர அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: