தமிழ்நாட்டில் 7 தொழில் நிறுவனங்களை விரிவாக்கம், கால நீட்டிப்பு செய்ய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 7 தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்வதற்கும், கால நீட்டிப்புக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொழில் தொடங்கவுள்ளோரை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் வழங்கி, முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு  பிறகு அமைச்சரவை கூட்டம் இன்று மீண்டும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் கூடியது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் தலைமை செயலாளர் சண்முகமும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தொழில்துறை மற்றும் வருவாய்த்துறை தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தொழில்துறையை பொறுத்தவரை 4 நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக வெஸ்டாஸ் என்ற நிறுவனத்தில் சுமார் 600 கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அதேபோல மற்றொன்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துடைய குத்தகை தொடர்பாக ஏற்கனவே அரசிற்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான நிலுவை தொகை என்பது வரியாக இருக்கிறது. இதை தமிழக அரசின் மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து வரும் சூழ்நிலையில் தற்போது மைதானத்திற்கான ஒப்பந்தத்தை மீண்டும் நீட்டிப்பு செய்வதற்கும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த இரு துறைகள் மட்டுமின்றி பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய முடிவுகளும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதால், சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: