திருச்சி அருகே ஆண் குழந்தையை சட்ட விரோதமாக விற்க முயன்ற இடைத்தரகர் கைது: போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சி அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை ரூ.1.15 லட்சத்துக்கு விற்ற இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர். மணப்பாறையை சேர்ந்த எச்.ஐ.வி பாதித்த தம்பதி அந்த ஊரிலுள்ள அரசு மருத்துவமனை எதிரே பெட்டி கடை நடத்தி வந்தனர். அப்போது அந்தோனியாம்மாள் என்கின்ற மேரி அவர்களுக்கு பழக்கமாகியுள்ளார். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உதவி செய்து அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்று கொள்வது அந்தோனியாம்மாளின் வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், எச்.ஐ.வி தொற்றுள்ள தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தீபாவளிக்கு சில நாட்கள் முன்னதாக மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அவர்கள் வறுமையில் வாடுவதை அறிந்த அந்தோனியாம்மாள் குழந்தையை விற்று கொடுப்பதாக கூறவே அதற்கு அந்த தம்பதியும் ஒப்பு கொண்டார்கள். இதையடுத்து மனப்பாறையை அடுத்த ஊத்துக்குளியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு ஆண் குழந்தை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கமிஷனாக 20 ஆயிரம் ரூபாயை அந்தோனியாம்மாள் பெற்று கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து குழந்தை விற்பனை தொடர்பாக திருச்சி குழந்தைகள் நல அலுவலகத்திற்கு ரகசிய கடிதம் மூலம் புகார் செல்லவே, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அஜிமாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்ற போலீசார் அந்தோனியாம்மாளை கைது செய்தனர். மேலும் குழந்தையை வாங்கியதாக கூறப்படும் தம்பதியை போலீசார் தேடி வருகிறார்கள். அந்தோனியாம்மாள் வேறு யாருக்கும் இதுபோல குழந்தையை விற்று கொடுத்திருக்கிறாரா? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: