காற்று மாசை கட்டுப்படுத்த முடியாத உங்களுக்கு எதற்கு பதவி ? : பஞ்சாப், ஹரியானா, டெல்லி தலைமைச் செயலாளர்களிடம் உச்சநீதிமன்றம் காட்டம்

டெல்லி: விளை நிலங்களில் வைக்கோல், இலை தழைகளை எரிப்பதை தடுப்பதில் அரியானா, பஞ்சாப் மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் உச்சநீதிமன்றத்தில் ஆஜாரான அரியானா, பஞ்சாப், டெல்லி தலைமைச் செயலாளர்களிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்வி எழுப்பினர்.

வழக்கின் பின்னணி

டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக அதிகரித்துள்ளது. பஞ்சாப், அரியானா, மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் வயல்களில் அறுவடைக்குப்பின் காய்ந்து கிடக்கும் வைக்கோல்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் காற்றில் புகை அதிகளவில் கலந்து டெல்லியில் காற்று மாசுவை ஏற்படுத்திவிட்டது. காற்று மாசுவின் அளவு அதிகரித்ததால், டெல்லியில் பள்ளிகளுக்கு ஒரு வார காலம் விடுமுறை விடப்பட்டது. மக்கள் முக மூடியுடன் வெளியே செல்கின்றனர்.  இந்த விவகாரத்தை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, காற்று மாசால் மக்கள் தங்களின் மதிப்புமிக்க வாழ்நாளை இழக்கின்றனர் என அரசு அதிகாரிகளிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இதையடுத்து பயிர்க்கழிவுகள் எரிப்பைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நீதிபதிகள் ஆணையிட்டனர்.

 3 தலைமைச் செயலாளர்களும் ஆஜர்

இந்நிலையில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன் 3 தலைமைச் செயலாளர்களும் ஆஜராகினர்.அப்போது, நடந்தது பின்வருமாறு...

உச்சநீதிமன்றம்  : காற்று மாசு விவகாரத்தில் பஞ்சாப் அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது.

உச்சநீதிமன்றம் : பஞ்சாப் திவாலான மாநிலம் அல்ல, அரசாங்கத்தை நடத்துகிறீர்கள், ஆனால் விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கித்தர பணம் இல்லை என்று கூறுகிறீர்கள்.உங்களது இந்த பதிலை கேட்டுக்கொண்டு நீதிமன்றம் அமைதியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

உச்சநீதிமன்றம் : 7 நாட்களுக்குள் பஞ்சாப்பில் உள்ள பயிர் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான வேலைகளை செய்யுங்கள், செலவுகளை பற்றி கவலைப்படாதீர்கள் அதையும் நாங்கள் உங்களுக்குப் பெற்றுத் தருகிறோம்.

உச்சநீதிமன்றம் : விளை நிலங்களில் வைக்கோல், இலை தழைகளை எரிப்பதை தடுப்பதில் அரியானா மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது.

உச்சநீதிமன்றம் :7 நாட்களுக்குள் பயிர் கழிவை எரிப்பதை தடுக்க அரசு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்துங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள்.(ஹரியானா தலைமை செயலருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்)

உச்சநீதிமன்றம் :காற்று மாசை கட்டுப்படுத்த முடியாத உங்களுக்கு எதற்கு பதவி ?( டெல்லியில் குப்பைகள் கொட்டப்படுவதைக் கூட தடுக்க முடியாத நீங்கள் ஏன் பதவியில் இருக்கிறீர்கள் ?டெல்லி தலைமைச் செயலாளரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி)

உச்சநீதிமன்றம் :சாலை புழுதிகளையும், கட்டிடங்களை இடிப்பதால் ஏற்படும் தூசிகளையும் டெல்லி மாநில அரசால் குறைக்க முடியவில்லை. 

Related Stories: