சென்னையில் பள்ளி குழந்தைகளை அதிக அளவு ஆட்டோவில் ஏற்றினால் உரிமம் ரத்து: போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

சென்னை: சென்னையில் பள்ளி குழந்தைகளை அதிக அளவு ஆட்டோவில் ஏற்றினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக அளவில் ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றக்கூடிய காரணத்தினால் சென்னையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்த விபத்தை தடுப்பதற்காக காவல்துறை சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆட்டோக்கள் மூலமாக பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒரு பகுதியில் இருந்து ஆட்டோவில் குறைந்தபட்சமாக 4 முதல் 5 குழந்தைகளை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும் என்பது போக்குவரத்து விதியாக உள்ளது. ஆனால் இந்த விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து பல ஆட்டோக்கள் அதிக அளவு குழந்தைகளை ஏற்றி செல்கின்றனர். இதன் காரணமாக பல போக்குவரத்து விதிமீறலைகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

பெற்றோர்கள் தரப்பிலும் ஒரே ஆட்டோ ஓட்டுனர் பல குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வதாக காவல்நிலையத்தில் பல்வேறு புகார்களை அளித்துள்ளனர். இந்த விவாகரம் தொடர்பாக பள்ளிகள் தரப்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, சென்னை போக்குவரத்து காவல்துறை நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டது. குறிப்பாக பள்ளிகள் தொடங்கும் நேரத்திலும், முடிவடையும் நேரத்திலும் ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அதிக அளவு குழந்தைகளை ஏற்றி செல்கின்றனரா? என சோதனை நடத்தப்பட்டது. அதன்படி, சென்னை முழுவதும் நடந்த சோதனையில் சுமார் 1,275 ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளை மீறி அதிக அளவு குழந்தைகளை ஏற்றி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அனைத்து ஆட்டோக்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விதிமீறி அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உரிமம், ஆட்டோ ஓட்டுநர் உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும் எனவும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: