சென்னையில் 12 ஏரிகளை ஆழப்படுத்தி கொள்ளளவை அதிகரிக்க எடுத்த நடவடிக்கை என்ன?: அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள 12 ஏரிகளை ஆழப்படுத்தி கொள்ளளவை அதிகரிக்க செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக டிசம்பர் 4ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நகர மக்களுக்கு நிலத்தடி நீர், பருவமழை மூலம் கிடைக்கும் நிலத்தடி நீர் போன்றவை தான் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. முந்தைய காலங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவிய போதும், எதிர்காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க நவீன நீர் சேகரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம், புழல் உட்பட 12 ஏரிகளை 10 அடி அளவிற்கு ஆழப்படுத்தி அதன் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ஏரிகளில் நீர்பிடிப்பினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் அதுகுறித்த நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையை சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி அதன் கொள்ளவை அதிகரிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கின் விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: