டெல்லியில் 10 மணி நேரம் நடைபெற்ற போலீசார் போராட்டம்: போலீசாருக்கு நியாயம் கிடைக்கும் என அதிகாரிகள் உறுதியளித்தையடுத்து போராட்டம் வாபஸ்

புதுடெல்லி:  கடந்த 2-ம் தேதி டெல்லியின் திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பு வரை சென்றது. இரு தரப்பினருக்கும்  ஏற்பட்ட பயங்கர மோதலில் இரண்டு தரப்பிலும் சேர்த்து 50 பேர் காயமடைந்தனர். இதில் 12 பைக்குகள், சிறைக்கைதிகளை ஏற்றிச்செல்லும் 8 வாகனங்கள், வழக்கறிஞர்களின் கார்கள் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன.  போலீசாரின் இந்த  சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே வழக்கறிஞர்களின் செயலை எதிர்த்து டெல்லியில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ எனக் கூறி அவர்கள் பதாகைகளை ஏந்தி டெல்லி காவல் துறை தலைமையகம் முன் போராட்டம்  நடத்தினர். டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று போராட்டத்தை கைவிட வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் சிறிது நேரம் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.  போலீசாரின் இந்த போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்திய போலீஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக போலீசார் தங்களுக்கு நீதிகோரி வீதியில் நின்று போராடியது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, வழக்கறிஞர்களுடனான மோதலில் காயமடைந்த காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்கப்படும் என டெல்லி சிறப்பு ஆணையர் ஆர்.எஸ் கிருஷ்ணய்யா தெரிவித்துள்ளார். மேலும், ’காவலர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்’;  காவலர்களை தாக்கிய வழக்கறிஞர்களுக்கு எதிராக எப்ஐஆர். பதிவு; வழக்கறிஞர்கள் தாக்கியது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார். இருப்பினும் போலீசார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாருடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட போலீசாருக்கு நியாயம் கிடைக்கும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று கொண்டு டெல்லி போலீசார்  தங்களின் போராட்டத்தை திரும்ப பெற்று கொண்டனர். காலை 9:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 10 மணி நேரத்திற்கு பிறகு மாலை 7:30 மணியளவில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் அனில் பெய்ஜால் கருத்து:

டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என போலீசாருக்கு ஆதரவாக டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால் கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும்   காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், போராடும் காவலர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டமாட்டாது என்றும் உறுதி அளிக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.  

தாக்குதலில் காயம் அடைந்த காவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் காயம் அமைந்த டெல்லி போலீசுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். காயமடைந்த   காவலர்களை அதிகாரிகள் சென்று பார்க்கவும் துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால் உத்தரவிட்டார்.

காங்கிரஸ் கருத்து:

நாடு சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகள் இல்லாத அளவில் தலைநகர் டெல்லியில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டி உள்ளது. இது தான் பாரதிய ஜனதாவின் புதிய இந்தியாவா? எனவும்  காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பா.ஜ.க.  நாட்டை எங்கே அழைத்துச் செல்கிறது எனவும் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்கே எனவும் காங்கிரஸ் கட்சி கேள்வி  எழுப்பியது.

Related Stories: