7 ஏக்கர் நிலப்பிரச்னையை தீர்க்காததால் ஆத்திரம் பெண் தாசில்தார் உயிருடன் எரித்துக்கொலை

* இளைஞர் அதிரடி கைது

* தெலங்கானாவில் பயங்கரம்

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில், தனது 7 ஏக்கர் நிலப்பிரச்னையை தீர்க்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெண் தாசில்தாரை இளைஞர் உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானாவின், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லபூர்மெட் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் விஜயா (38). இவருக்கு கணவன் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதே தாலுகா கவுரல்லி கிராமத்தைச் சேர்ந்தவர்  சுரேஷ் (40). இவருக்கு 7 ஏக்கர் நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்துள்ளது.  இந்த பிரச்னைக்கு தாசில்தார் விஜயா தீர்வு காண  வேண்டும் என கடந்த 2 மாதங்களாக சுரேஷ் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த நில  விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இதுகுறித்து எந்த  முடிவும் எடுக்க முடியாது என தாசில்தார் விஜயா கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தாசில்தார் விஜயாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தாலுகா அலுவலகத்திற்கு தாசில்தார் விஜயா வந்தார். மதியம் 1.30 மணியளவில் அங்கு வந்த சுரேஷ், தாசில்தார் விஜயாவிடம் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் தாசில்தார் அறைக்கு அவரை அனுப்பி வைத்தனர். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுரேஷ் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தாசில்தார் விஜயா மீது ஊற்றிவிட்டு தீவைத்தார். இதில் சுரேஷும் தீக்காயமடைந்தார். சில நிமிடங்களில் நடந்த இந்த சம்பவத்தால் குபீரென தீப்பற்றி எரிந்தது.உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறித் துடித்தபடி வெளியே ஓடிவந்த தாசில்தார் விஜயா, தன்னை காப்பாற்றும்படி கதறினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் விஜயாவை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் கொளுந்துவிட்டு எரியும் தீயுடன் போராடிய விஜயா அலுவலக வாசலிலேயே சிறிது நேரத்தில் பரிதாபமாக உடல்கருகி இறந்தார்.

இதற்கிடையே அலுவலகத்தில் இருந்து தப்பி ஓட முயன்ற சுரேஷை, ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவருக்கு தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார். அவரை பிடித்து வைத்ததும் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஹயத்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் தீக்காயமடைந்த உதவியாளர் சந்திரய்யா மற்றும் டிரைவர் குருநாத ரெட்டி ஆகியோரை மீட்டு, சிகிச்சைக்காக ஹயத்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து ராட்ச கொண்ட காவல்துறை ஆணையர் மகேஷ் பகவத் நிருபர்களிடம் கூறியதாவது: தாசில்தார் விஜயா கொலை வழக்கில் சுரேஷ் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவருக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

2 நாட்களாக  நோட்டமிட்டு கொலை

கைதான சுரேஷ், கடந்த 2  நாட்களாக தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் எப்போது வருவார்கள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் எந்த நேரத்தில் குறைந்து  இருப்பார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவு இடைவேளையின்போது இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: