பசுமை தாயகம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தரமான அரிசி வழங்கும் திட்டம்: அரசு செயல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு, 10 மாதங்கள் நிறைவடைந்து விட்டாலும் அதன் பயன்பாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  உலகிலேயே மிக அதிக அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் வீசும் நாடு பிலிப்பைன்ஸ் தான். அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அந்த நாட்டில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதேபோல், தெலங்கானா மாநிலத்தில் முளுகு மாவட்டத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் நாராயணரெட்டி அறிவித்தார்.

தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த முடியும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய வார இறுதி நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும். 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கும் திட்டத்தை விரிவாக செயல்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

Related Stories: