திருவள்ளுவர் சிலையில் கருப்பு மை பூசிய விவகாரம் குற்றவாளிகளை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் தனிப்படை : டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தஞ்சை அருகே உள்ள பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு அந்த ஊர் மக்கள் தினமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் ேநற்று அதிகாலை திருவள்ளுவர் சிலையை பார்த்த போது, சிலையின் கண்களில் கருப்பு மை பூசியும், மாட்டு சாணத்தையும் வீசப்பட்டிருந்தது. அதை பார்த்த ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர்  ஒன்று கூடி குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் மற்றும் டிஎஸ்பி சீதாராமன் சம்பவ இடத்திற்கு வந்து திருவள்ளுவர் சிலையை சுத்தப்படுத்தினர். பிறகு சம்பவம் குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட தகவல் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியது. பல இடங்களில் தமிழ் அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்றது. திருவள்ளுவர் சிலையை அவமதித்த செயலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் உதவி ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவள்ளுவரை அவமதித்த நபர்களை கைது செய்ய கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

இதையடுத்து தமிழக டிஜிபி திரிபாதி திருவள்ளுவர் சிலைக்கு கருப்பு மை மற்றும் மாட்டு சாணத்தை பூசிய மர்ம நபர்களை பிடிக்க டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி தனிப்படையினர் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள செல்போன் சிக்னலை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: