மாவட்டம் முழுவதும் 166 மி.மீ பதிவு: நெல்லையில் இரவில் பல இடங்களில் மழை: நிரம்பும் நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகள்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இரவில் மீண்டும் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 166 மி.மீ மழை ஒரு மணி நேரத்தில் பதிவானது. நெல்லை மாவட்டத்தில் கடந்த தென்மேற்கு பருவமழை முழுமையாக விவசாயிகளுக்கு பலன் அளிக்காத நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை கைகொடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்வதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழையால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 133.10 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணையில் அதிகபட்சம் 140 அடி மட்டுமே தண்ணீர் தேக்கப்படும் என்பதால் அணை நிரம்புவதற்கு இன்னும் 7 அடி தண்ணீரே தேவைப்படுகிறது. எனவே அடுத்த ஒரு சில தினங்களில் பாபநாசம் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 7 மணி நேரம் நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 1391.85 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1213.50 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தாமிரபணி ஆற்றிலும், அனைத்துக் கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்வாய்களின் மூலம் பலன் பெறும் சிறிய குளங்களுக்கும் தண்ணீர் பாயத் தொடங்கியுள்ளது. 156 அடி கொள்ளளவு உடைய சேர்வலாறு அணையின் நீர் மட்டம் 144.19 அடியாக உள்ளது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 61.90 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 231 கனஅடி நீர் வருகிறது. தண்ணீர் வெளியேற்றம் இல்லை. இதுபோல் மாவட்டத்தில் உள்ள பிற அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.இதற்கிடையே நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) வருமாறு:

பாளையங்கோட்டை-32, நெல்லை-29, கடனா மற்றும் சேர்வலாறு-27, பாபநாசம்-13, மணிமுத்தாறு-2, ராமநதி-12, கருப்பாநதி-3.5, குண்டாறு, நம்பியாறு தலா- 10, அடவிநயினார்-12, அம்பை-7, ஆய்க்குடி-11.80, சேரன்மகாதேவி-10.20, சங்கரன்கோவில்-22, செங்கோட்டை-10, சிவகிரி-13, தென்காசி-14. இன்று காலை மழை சற்று ஓய்ந்து காணப்பட்டது. சில பகுதிகளில் மேகமூட்டம் காணப்பட்டது.

Related Stories: