ஹரியானாவில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி: மீட்பு பணி தீவிரம்...!

சண்டிகர்: ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்றுமாலை  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.இதனை தொடர்ந்து இதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வந்து சிறுமியை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். சிறுமிக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. அவர் மீட்கப்பட்டவுடன் மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். 50 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் சிறுமி இருக்கும் ஆழம் வரை பள்ளம் தோண்டியதும்,  பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி, சிறுமியை மீட்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இந்த பகுதியில் பாறைகள் இல்லாத காரணத்தினால் எளிதில் சிறுமியை பத்திரமாக மீட்கப்படுவார் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் நீங்காத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது ஒட்டுமொத்த மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: