மோடியுடன் நடிகைகள் செல்பி எடுத்த விவகாரம் எங்கள் செல்போனை மட்டும் பறித்தது ஏன்?: சந்தேகத்தை கிளப்பும் பாடகர் எஸ்பிபி

சென்னை: ‘பிரதமர்  மோடியுடன் நடிகைகள், இந்தி நடிகர்கள் செல்பி எடுத்த சம்பவத்தில், எங்கள் செல்போனை மட்டும்  பறித்தது ஏன்?’ என்று, பிரபல பாடகர் எஸ்பிபி, சந்தேகத்தை கிளப்பி உள்ளார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாடும்‌  நிகழ்ச்சி கடந்த  சில வாரங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த  நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், ஆமிர்கான், கங்கனா  ர‌னாவத்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்  பிரதமர் மோடியுடன், தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே பிரதமர்   மோடி அழைப்பு விடுத்ததாக விமர்சனம் எழுந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த  கலைத் துறையினர் புறக்கணிக்கப்பட்டதாக சில பிரபலங்கள் கருத்து  தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பின்னணி பாடகர்   எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சில கருத்துகளை  பகிர்ந்துள்ளார்.

அதில், ‘நான் ராமோஜி ராவுக்கு நன்றியுள்ளவன்.  ஏனெனில், அக். 29ம் தேதி பிரதமர் மோடி நடத்திய விருந்தில் அவரால் நான்  கலந்து கொண்டேன். நுழைவாயிலில் உள்ளே சென்றபோது எங்களது செல்போன்களை பாதுகாப்புக்கு இருந்த  அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டோம். அதற்காக டோக்கன் கொடுத்தார்கள். ஆனால், அதே நாளில் நிறைய பிரபலங்கள் பிரதமருடன் செல்பி எடுத்துக் கொண்டது எனக்கு குழப்பத்தை  ஏற்படுத்தி உள்ளது’ என்று  பதிவிட்டுள்ளார். இவரது பேஸ்புக் பதிவு குறித்து, சமூக வலைதளங்களில் எஸ்பிபிக்கு ஆதரவாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Related Stories: