பூந்தமல்லி அருகே டெங்குவுக்கு இளம்பெண் பலி: மாஸ் கிளீனிங் சிறப்பு முகாம் தீவிரம்

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சி ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்த லாவண்யா(20), தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த லாவண்யா வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த பகுதியில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக  இருப்பதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாநில சுகாதார இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் துணை இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் அந்த பகுதி முழுவதும் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், களப்பணியாளர்கள், ஆலோசனைக்கூட்டமும் நடைபெற்றது. காட்டுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் மாஸ் கிளீனிங் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நோய் தடுப்பு அலுவலர் வேல்முருகன், மலேரிய தடுப்பு அலுவலர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கௌதமன், ஊராட்சி செயலர் விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கொசு ஒழிப்பு அதிரடிப்படை என்ற பெயரில் 8 வாகனங்களில் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து புகை அடித்தல், பிளீச்சிங் தெளித்தல், தேங்கியிருக்கும் மழை நீர், கழிவு நீர், குப்பைகளை அகற்றுதல் என பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் காட்டுப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த சில தனியார் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனங்களுக்கு ரூ1.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு காய்ச்சல் தாக்கம் உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து சோதனை செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: