சமூக வலைதளங்களில் நீதிபதிகளை கட்டுப்பாடின்றி விமர்சிப்பது கவலையளிக்கிறது: உச்ச நீதிமன்ற நீதிபதி பாப்டே கருத்து

புதுடெல்லி: ‘‘சமூக வலைதளங்களில் நீதிபதிகள் பற்றி கட்டுப்பாடற்ற விமர்சனங்களை செய்வது வருத்தம் அளிக்கிறது,’’ என உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறவுள்ளதால், 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே வரும் 18ம் தேதி பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:சமூக இணையதளங்களில் நீதிபதிகள் விமர்சிக்கப்படுவது எனக்கு கவலை அளிக்கிறது. இது, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பாதிக்கும். இதனால், நீதிபதிகள் தொல்லைக்கு ஆளாகிறார்கள். இதை யாரும் விரும்புவது இல்லை. இவற்றை புறக்கணிக்கும் அளவுக்கு எல்லோரும் இருப்பது இல்லை. நீதிபதிகளும் சாதாரண மனிதர்கள்தான்.

சமூக வலைதளங்களில் வரும் இந்த கட்டுப்பாடற்ற விமர்சனத்துக்கு முடிவு கட்ட, தற்போதுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தால் எதுவும் செய்ய முடியாது. இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்றே தெரியவில்லை. இது நீதிபதிகளின் நன்மதிப்பை கெடுக்கிறது. இந்த சூழ்நிலையிலும், பேச்சு சுதந்திரம் இல்லை என புகார்கள் வருகின்றன. தீர்ப்பை விமர்சிக்காமல் நீதிபதியை விமர்சிப்பது அவமதிப்பு. சரியான நேரத்தில் தீர்ப்பளிப்பதற்கு நீதித்துறை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீதி வழங்குவதை தேவையில்லாமல் தாமதிக்கவும் கூடாது, அவசரமாகவும் வழங்க கூடாது. நீதி வழங்குவதை தாமதிப்பது குற்றங்களை அதிகரிக்கச் செய்யும். தீர்ப்புகளை விரைவில் வழங்க நீதித்துறை நவீனமயத்துக்கு மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: