மகாராஷ்ட்ரா அரசியலில் பரபரப்பு: சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க 170 எம்எல்ஏக்கள் ஆதரவு...சஞ்சய் ராவத் பேட்டி

மும்பை: மகாராஷ்ட்ரா தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் 170 பேர் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில்  பா.ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், சிவசேனாவின் நிலைப்பாட்டால்  மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் இழுபறி  நீடித்து வருகிறது. இரண்டரை  ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் இருகட்சிகளுக்கும் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சமபங்கு ஆகிய கோரிக்கையை சிவசேனா திடமாக வலியுறுத்தி  வருகிறது.

ஆனால், இதை ஏற்க பா.ஜனதா மறுத்து விட்டது. சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவியுடன், 15 அமைச்சர் பதவிகள் ஒதுக்க தயாராக இருப்பதாக பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்ட திட்டத்தையும் சிவசேனா ஏற்க மறுத்து விட்டது. இந்த    நிலையில், பா.ஜனதாவை கழற்றி விட்டுவிட்டு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய அரசு அமைப்பதற்கான முயற்சியில் சிவசேனா ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ்    தாக்கரேயின் நம்பிக்கைக்குரியவருமான சஞ்சய் ராவுத் கடந்த சில நாட்களுக்குமுன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது பா.ஜனதாவுக்கு மாற்றாக சிவசேனா தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவசேனாவின் இந்த முயற்சிக்கு மகாராஷ்டிரா  மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத், முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், பிருத்விராஜ் சவான் போன்ற தலைவர்களும் சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிவசேனாவின் திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவை  சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக பாலாசாகேப் தோரத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க 170 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை 175 ஆக  அதிகரிக்கக்கூடும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘கூட்டணி சேர்ந்து ஆட்சியமைப்பது குறித்து இதுவரையில் பேசவில்லை. பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தால், அது முதல்வர் பதவி பற்றியதாகத் தான் இருக்கும்’  என்று தெரிவித்தார். அதனால், அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: