வேதாரண்யத்தில் ஒரே நாளில் மீனவர்கள் வலையில் 10 டன் மத்தி மீன்கள் சிக்கின: விலை உயர்வால் மகிழ்ச்சி

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் அதிகஅளவில் மத்தி மீன்கள் கிடைப்பதாலும் அதன்விலை அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேதாரண்யம் தாலுகாபுஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளத்தில் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையோரத்தில் நிறுத்தி படகுகள் மற்றும் வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளத்திலிருந்து குறைந்த தூரம் பைபர் படகுகளில் மீனவர்கள் மத்தி மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று மீனவர்கள் வலையில் மத்திமீன் அதிகஅளவு கிடைத்தது. ஒருகிலோ மத்திமீன் 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை ஆனது. நேற்று ஒரேநாளில் 10 டன் மத்திமீன்கள் மீனவர்கள் வலையில் கிடைத்தன. இந்த மீன்கள் வியாபாரிகளால் வாங்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்தி மீன்கள் கடந்த வாரத்தில் ரூபாய் 40க்கு விற்ற நிலையில் நேற்று அதிகபட்சமாக 150 ரூபாய்க்கு விற்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடற்கரை யோரத்தில் வெப்பம் அதிகமாக நிலவுவதால் மத்தி, சூரை, அயிரை ஆகிய மீன்கள் அதிகளவில் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: