அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழக கோயில்களின் பாதுகாப்பு, தூய்மை பணி தனியாரிடம் அளிப்பு

* தினக்கூலி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்

* சிலை, நகைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியா?

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பாதுகாப்பு, தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றி வரும் தினக்கூலி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் முக்கியமானவை. இக்கோயில்ளுக்கு வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் என  ஏராளமானோர் வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. ஆனால், குறைவான சம்பளத்தை காரணம் காட்டி முன்னாள் ராணுவத்தினர் பணிக்கு வர மறுக்கின்றனர். இதனால் கோயில்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதை தொடர்ந்து தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்புக்கு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது 1000 கோயில்களில் பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மற்ற கோயில்களிலும் பாதுகாப்பு பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று முக்கிய கோயில்களில் துப்புரவு பணிக்கு நிரந்தர, தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். தற்போது அந்த கோயில்களிலும் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 100 கோயில்களில் இது போன்று ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற கோயில்களிலும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த கோயில்களில் தற்காலிக பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும் அந்தந்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறும் போது, ‘அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பாதுகாப்பு மற்றும் தூய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கவே ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. தற்போது 1000 கோயில்களில் தூய்மை பணிக்கான ஒப்பந்தம் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது’ என்றார்.

Related Stories: