எங்கிருந்தாலும் நீங்கள் இந்தியர்களே: தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டு பிரதமர் மோடி பேச்சு

பாங்காக்: இந்தியா-ஆசியான் மாநாடு தாய்லாந்தில் 3ம் தேதி நடக்கிறது. இதைப்போல 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. ஆசியான் அமைப்பில் புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர்,  சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்­பைன்ஸ், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் இடம்  பெற்றுள்ளன. இவற்றுடன் ஆசியான் அமைப்புடன் தடையற்ற வர்த்தக உறவு கொண்டுள்ள இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா,  நியூசிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் இணைந்துள்ளன. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று பாங்காக் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு விமான நிலையத்தில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியாக தலைநகர் பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, தாய்லாந்து  மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். நூலை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி,  பாங்காக்கில் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார். அத்துடன் பல்வேறு இந்திய மொழிகளில் வணக்கம் கூறினார்.

எங்கிருந்தாலும் நீங்கள் இந்தியர்களே; தாய்லாந்து எனக்கு வெளிநாடு போன்று தோன்றவில்லை, சுற்றுப்புறம் உள்ளிட்டவை எனது வீட்டில் இருப்பது போல் உணர வைக்கின்றன என்று தெரிவித்தார். தாய்லாந்தின் அரச குடும்பம்  இந்தியாவுடனான உறவு, நமது ஆழ்ந்த நட்பு மற்றும் வரலாற்று உறவுகளை அடையாளப்படுத்துகிறது. இளவரசி மகா சக்ரி சிரிந்தோர்ன் சமஸ்கிருத மொழியில் நிபுணர் மற்றும் கலாச்சாரத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில், குருநானக்கின் 550-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.

Related Stories: