3 நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுள்ளார். தாய்லாந்தில் நடக்கும் 16வது ஆசியான் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.  தொடர்ந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூலை அவர் வெளியிடுகிறார். இந்தியா-ஆசியான் மாநாடு தாய்லாந்தில் 3ம் தேதி  நடக்கிறது. இதைப்போல 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று பாங்காக் புறப்பட்டு சென்றுள்ளார். ஆசியான் அமைப்பில் புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்­பைன்ஸ், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் இடம்  பெற்றுள்ளன. இவற்றுடன் ஆசியான் அமைப்புடன் தடையற்ற வர்த்தக உறவு கொண்டுள்ள இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் இணைந்துள்ளன.

இது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு பிரிவு செயலாளர் விஜய் தாகூர் கூறியதாவது, 16வது ஆசியான் மாநாடு, 14வது கிழக்கு ஆசிய மாநாடு, 3வது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு மாநாடு ஆகியவை பாங்காக்கில் நாளை முதல் 4ம் தேதி  வரை நடைபெற உள்ளது. இதில் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகளான, 16  நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ சாவின் அழைப்பை ஏற்று,  இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தாய்லாந்து புறப்பட்டு செல்கிறார். அங்கு, இதர நாடுகளின் தலைவர்களை சந்தித்து, பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து புறப்பட்டுள்ளார்.

Related Stories: