செவிலியர் பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழந்த விவகாரம் மருத்துவ கல்வி இயக்குநர், கல்லூரி முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால், பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் மற்றும் கல்லூரி  முதல்வர் 4 வாரத்திற்குள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் முடி திருத்தும் தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி பிரியா,  மூன்றாவது பிரசவத்திற்காக  தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது, பின்னர் அதிக ரத்தப்போக்கு காரணமாக இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரசவம் பார்த்த போது  மருத்துவர் இல்லாததாலும், அதே சமயம் அதிக ரத்தப் போக்கை  செவிலியர்கள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியதாலும் பிரியா இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

பின்னர் இச்சம்பவம் கடந்த வாரம் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் இந்த செய்தியை படித்து பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ெஜயச்சந்திரன் தானாக முன்வந்து  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும் என்று நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: