நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். சாபாநாயகர் தனபால் அறையில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற முத்தமிழ்செல்வன், மற்றும் நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் முதல்வர், துணை முதல்வர், மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பதை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி  சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டனர்.  கடந்த 21ம் தேதி நடைபெற்ற வாக்குபதிவில் விக்கிரவாண்டி தொகுதியில் 81.41 சதவீத வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீதம் வாக்குகளும் பதிவாகியது.

விக்கிரவாண்டி தொகுதியில்  அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி நாராயணன் 32,333 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று இரண்டு பேருக்கும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று கொண்டனர். 2 பேரும் பதவியேற்றுக் கொண்டதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் அதிமுக-வின் பலம் 124 -ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜான்குமார் எம்.எல்.வாக பதவியேற்பு

புதுச்சேரியில் காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஜான்குமார் எம்.எல்.வாக பதவியேற்று கொண்டார். சட்டமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜான்குமாருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories: