ஜேஎன்யுவில் நடைபெற இருந்த ஐசிசி தேர்தல் ஒத்திவைப்பு : மாணவர் சங்கம் உற்சாகம்

புதுடெல்லி: தவிர்க்க முடியாத நிர்வாக அலுவல்கள் காரணமாக துறைசார் புகார்கள் கமிட்டி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) அறிவித்து உள்ளது. தேர்தல் நடைபெறாததற்கு நாங்கள் தான் காரணம் என மாணவர் சங்கம் உற்சாகம் அடைந்து உள்ளது.இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாமல் ஜேஎன்யு நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிர்வாக அலுவல்கள் காரணமாக நடப்பு கல்வி ஆண்டுக்கான துறைசார் புகார்கள் கமிட்டி (ஐசிசி) தேர்தல் அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. குறித்த தேதியில் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளோம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதால்,  தேர்தலில் கவனம் செலுத்த முடியவில்லை. ஐசிசி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஆனால், பல்கலைக்கழகம் பொய் சொல்கிறது என மாணவர் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) கொந்தளித்து உள்ளது. ஐசிசி என்பது ஜேஎன்யு துணைவேந்தரின் கனவு திட்டம். ஜேஎன்யு மாணவர்களால் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த, பலாத்கார கொடுமைகளை விசாரிக்கும் பாலின பாகுபாடு கமிட்டியை (ஜிஎஸ்சிஏஎஸ்எச்) 2017ல் கலைத்து அதற்கு மாற்றாக ஐசிசியை துணைவேந்தர் தனது லட்சிய திட்டமாக அமைத்தார். அவரது லட்சிய திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே, மாணவர்கள் தரப்பில் ஐசிசி உறுப்பினர் பதவி போட்டிக்கு மனு தாக்கல் செய்யவில்லை. மாணவர் உறுப்பினர் போட்டியிடாததால், தேர்தலை நடத்த முடியாமல் போயுள்ளது. இதுவே சரியான காரணம். இது எங்களுக்கு கிடைத்த வெற்றி. மேலும், துணைவேந்தர் உருவாக்கிய ஐசிசி கமிட்டி என்பது, நிர்வாகத்தின் கைப்பாவையாக செயல்படும் என்பதால் மாணவர்கள் அதனை புறக்கணிப்பு செய்கின்றனர் என மாணவர் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: