சாத் பூஜைகள் இன்று முதல் தொடக்கம்: தயார் நிலையில் யமுனை

புதுடெல்லி: இன்று தொடங்கும் சாத் பூஜை வழிபாட்டுக்காக, யமுனை ஆற்றங்கரை காட்டுகள் சீரமைக்கப்பட்டு அங்கு அனைத்து வசதிகளும் மாநகராட்சிகளால் செய்யப்பட்டு உள்ளது.பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில மக்களின் வழிபாடுகளில் 4 நாள் விரதம் மேற்கொள்ளும் சாத் பூஜை விசேஷமானது. உலகில் பிறக்க வைத்து, ஆளாக்கியதற்கு சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்படும் சாத் பூஜை இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பூஜையை முன்னிட்டு யமுனை ஆற்றில் அமைந்துள்ள காட்டுகளும் அதன் சுற்றுப் பகுதிகளும் சீரமைக்கபட்டு வருகிறது. நடமாடும் மருத்துவமனை, தற்காலிக கழிப்பறை வசதி, உடை மாற்றும் அறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை டெல்லியின் 3 மாநகராட்சிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்து உள்ளன என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பூஜையின் கடைசி 2 நாட்களிலும் தண்ணீரில் முங்கி எழுந்து சூரியனுக்கு தண்ணீர் தாரை வார்க்கும் நிகழ்ச்சியில், விபரீத சம்பவங்களை தவிர்ப்பதற்காக, யமுனையில் உருட்டு கட்டைகளை கொண்டு சிறப்பு பாதுகாப்பு  செய்யப்பட்டு உள்ளது.வடக்கு மாநகராட்சி எல்லைக்குள் அமைந்த 150 காட்களிலும் மின்சார விளக்கு வசதி, நீர்நிலைகளில் இருந்து பரவும் வைரஸ் தாக்கத்தை தவிர்க்க உரிய சுகாதார நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் செய்துள்ளதாக மேயர் அவ்தார் சிங் கூறியுள்ளார்.

Related Stories: