ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு ரூ.5 லட்சம் தான் செலவு: திருச்சி கலெக்டர்

திருச்சி: மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு இவ்வளவு தான் செலவு செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 2 வயது குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். சுஜித்தின் பெற்றோர் பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாமேரி தம்பதியரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் சுஜித்தை மீட்க ரூ.11 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதையறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுஜித் மீட்பு பணிக்கு ரூ.5 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; எல்அன்ட்டி நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் இதுவரை எந்தவிதமான செலவுத்தொகையையும் கோரவில்லை. அதுபோல் என்.எச்.ஏ.ஐ., கே.என்.ஆர். நிறுவனம், உள்ளூர் பொக்லைன் எந்திர ஆப்ரேட்டர்களும் எவ்விதமான செலவு தொகையும் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

அனைத்து எந்திரங்களுக்கும் 5000 லிட்டர் டீசல் மட்டும் வழங்கப்பட்டது. இதர செலவினம் தொகை ரூ.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. எனவே சமூக வலைதள செய்திகள் மற்றும் பொய்யான செய்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம். பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுஜித்தை மீட்க எந்திரங்கள் வழங்கி உதவியவர்களுக்கும், மனிதாபிமான அடிப்படையில் உதவிய அனைவருக்கும் தமிழக அரசின் சார்பாகவும், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Related Stories: