திருப்புத்தூரில் மரம் விழுந்து விபரீதம் அரசுப்பள்ளி மேற்கூரை சேதம்

*அதிர்ஷ்டவசமாக 42 மாணவர்கள் தப்பினர்

திருப்புத்தூர் : திருப்புத்தூரில் மரம் விழுந்ததில் அரசுப்பள்ளி மேற்கூரை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக 42 மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் சாம்பான் ஊரணி அருகே கீழரத வீதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 1973ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 42 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உட்பட 2 ஆசிரியைகள் பணியில் உள்ளனர். இப்பள்ளியில் தினந்தோறும் மதிய உணவு இடைவேளைக்கு பின் குழந்தைகள் சற்று நேரம் வெளியில் விளையாடுவது வழக்கம். ஆனால் நேற்று மதியம் மழை பெய்ததால் மாணவர்கள் வகுப்பறையில் இருந்தனர்.

அப்போது திடீரென பள்ளியின் அருகில் இருந்த கொடிக்காப்புளி மரம் காற்றில் முறிந்து பள்ளி மேற்கூரை மீது விழுந்தது. இதில் ஓடுகள் நொறுங்கி உள்ளே விழுந்தன. இதனையடுத்து தலைமையாசிரியை, மாணவ, மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து வெளியே அழைத்து வந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக 42 குழந்தைகள், 2 ஆசிரியைகள் காயமின்றி தப்பினர்.

தகவலறிந்து வந்த தாசில்தார் ஜெயலெட்சுமி, மண்டல துணை தாசில்தார் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் செல்வம், விஏஓ பாலமுருகன் உள்ளிட்ட அலுவலர்கள் பள்ளியை பார்வையிட்டனர். பின்னர் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மோகன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் மிஷின் மூலம் பள்ளியின் மேற்கூரையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் திருப்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: