முசிறி அருகே தண்டலைப்புத்தூரில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய அங்கன்வாடி மையம்

முசிறி : முசிறி அருகே தண்டலைப்புத்தூர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் சமூக விரோதிகள் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்று மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்துள்ளனர். மேலும் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே தண்டலைபுத்தூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதன் பொறுப்பாளராக பானுமதி, கண்காணிப்பாளராக ராணி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

 இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கன்வாடி மைய கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சமூகவிரோத கும்பல் அங்கு அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் போதை தலைக்கேறியதில் மையத்தில் இருந்த பொருட்களை இறைத்துவீசியும், மின்விசிறியை வளைத்தும், அங்கிருந்த கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை உடைத்தும் சேதப்படுத்தி உள்ளனர். பின்னர் காலி மது பாட்டில்களை குழந்தைகள் அமரும் இடத்தில் சுக்குநூறாக துக்களாக உடைத்து அங்கேயே போட்டுள்ளனர்.

இது குறித்து மைய பொறுப்பாளர் முசிறி காவல் நிலையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீபாவளி விடுமுறையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் அங்கன்வாடி மையத்திற்குள் நுழைந்து இதுபோன்ற அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: