ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று மேற்கு வங்காள தொழிலாளர்கள் 5 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று, மேற்கு வங்காள தொழிலாளர்கள் 5 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். நேற்று முன் தினம், அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில், வெளிமாநிலத்தைச்சேர்ந்த டிரக் ஓட்டுநரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து வெளி மாநிலத்தவரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது, அங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பம் கேள்வி பட்டதும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தொழிலாலர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்ய, ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் குழு அங்கு சென்றுள்ள சூழலில், பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அதேபோல் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தேர்வு மையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். தீவிரவாதிகள் திடீரென தேர்வு மையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். மேலும் தீவிரவாதிகள் - ராணுவத்தினர் மோதலால் தேர்வு மையத்தில் சிக்கி 5 மாணவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தது குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: