கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற 120 மீனவர்களை மீட்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பாத 120 மீனவர்களை மீட்கக்கோரி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு  கடும் மழை மற்றும் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தது. இதையடுத்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம்துரை, வல்லவலை, நீரோடி, தூத்தூர் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 120 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

அவர்கள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை. கடந்த 17ம் தேதி இவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். புயல் சின்னம் குறித்த தகவலைகளை தெரிவிப்பதற்காக மீனவர்களை தொடர்பு கொண்டபோது, அவர்களின் தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த பகுதிகளை சேர்ந்த பங்குத்தந்தைகள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். அதில், கடலுக்கு சென்ற மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீனவர்களை தொடர்பு கொண்டு அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக பங்குத்தந்தைகள் கூறியுள்ளனர்.

Related Stories: