வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 18ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க நவம்பர் 18ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ந்த பின்னரே உள்ளாட்சி அமைப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இயலும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4-ம் தேதி வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி  உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்காக வரவழைக்கப்பட்டுள்ள 1.45 லட்சம் வாக்கு இயந்திரங்களில் முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசத்தை மேலும் நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பெயர் இடம்பெற்றால்தான் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க இயலும் என அறிவித்துள்ளது. வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தும், நீக்கல் ஆகியவை www.nvsp.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் குறித்த விவரங்கள் www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: