அரியானாவில் ஆட்சி அமைக்கிறது பாஜக : துணை முதல்வராகிறார் ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா

புதுடெல்லி: அரியானாவில் ஜனநாயக மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. டெல்லியில் அமித்ஷாவுடன் ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த உடன்பாட்டின் படி அரியானா மாநிலத்தின் துணை முதலமைச்சராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க உள்ளார்.  அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாஜ கட்சி ஆட்சி நடைபெற்ற நிலையில், கடந்த 21ல் அம்மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் நடந்தது. இதில், பாஜ, காங்கிரஸ், ஜேஜேபி (ஜன்னாயக் ஜனதா கட்சி) ஆகிய கட்சிக்கும் இடையே மும்முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டதால், தொங்கு சட்டப்பேரவை உருவாகும் சூழல் ஏற்பட்டது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு 90 இடங்களில் 46 இடங்கள் தேவை என்ற போது, பாஜ கட்சி 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாகத்தான் வர முடிந்தது. காங்கிரஸ் கட்சியும் 31 இடங்களை மட்டுமே பெற்று தனிப்பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை.

இந்நிலையில், அரியானாவில் சுயேச்சை எம்எல்ஏக்களான கோபால் கன்டா (லோஹித் கட்சி), ரஞ்சித் சிங் உள்ளிட்ட 5 சுயேச்சை எம்எல்ஏக்களை சிர்சா மக்களவைத் தொகுதி பாஜ எம்பி. சுனிதா துக்கல், சிர்சாவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். 10 இடங்களை கைப்பற்றி ஜேஜேபி கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமா அல்லது பாஜவை ஆதரிக்குமா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. இக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, இன்று தனது கட்சி எம்எல்ஏக்களுடன் டெல்லியில் ஆலோசனை அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். அமித்ஷாவுடன் ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து அரியானாவில் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

Related Stories: