கோயம்பேடு மார்க்கெட், புழல் காவாங்கரை பகுதிகளில் சாலையில் திரியும் மாடுகள், நாய்கள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே மாடுகள் சுற்றி வருவதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். பேருந்துகள் செல்லும் பகுதிகளில் மாடுகள் திரிவதால் போக்குவரத்து பாதிக்கிறது. மேலும், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மாடுகள் திரிவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இதையடுத்து சுகாதார ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட் அருகே சுற்றித்திரிந்த மாடுகளை மடக்கி பிடித்தனர். இதையறிந்த மாடு உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை பணியை செய்யவிடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளித்தும் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே இப்பகுதியில் 60 மாடுகளை பிடித்து பாரிமுனையில் உள்ள மாட்டு தொழுவத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22, 23, 24, 25, 26 ஆகிய வார்டு பகுதிகளான புழல், கண்ணப்பசாமி நகர், காவாங்கரை, கன்னடபாளையம், சக்திவேல் நகர், தமிழன் நகர், திருநீலகண்ட நகர், புனித அந்தோணியார் நகர், கடைவீதி, அண்ணா நினைவு நகர், எம்ஜிஆர் நகர், கதிர்வேடு, புத்தகரம், சூரப்பட்டு, பாரதிதாசன் நகர், சண்முகபுரம், லட்சுமிபுரம், ரெட்டேரி, கடப்பா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் நாய் குறுக்கே வரும்போது அதன் மீது ஏறி விபத்துகள் ஏற்பட்டு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட மாதவரம் மண்டல அலுவலகம் மற்றும் வார்டு அலுவலங்களில் உள்ள அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை இந்த நாய்களுக்கு தடுப்பூசிகள் போடாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பு ஊசி போட்டுகருத்தடை ஊசி போட்டு நாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “அனைத்து தெருக்கள், சாலைகள் மற்றும் ஓட்டல் டீக்கடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் இரண்டு சக்கர வாகனங்களிலும், நடந்து செல்லும்போதும் நாய்களிடம் இருந்து பயந்து செல்கிறோம்.

இதில் ஒருசில நாய்கள் சொறி பிடித்து திரிகின்றன. அந்த நாய்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்தாக கூடிய நிலை ஏற்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வார்டு அலுவலகங்கள் மண்டலங்களில் நேரில் சென்று புகார் தெரிவித்தால் ஒப்புக்காக நாய் பிடிக்கும் வாகனங்கள் அனுப்புகின்றனர். ஆனால் அவர்களால் சாலையில் திரியும் நாய்களை பிடிக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் நாய்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்” என்றனர்.

Related Stories: