தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வங்கக்கடலில் காற்றழுத்தம் உருவானது. அதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தற்போது அந்த காற்றழுத்தம் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்றும் மழை பெய்தது. அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. முண்டியம்பாக்கம் 60 மிமீ, உசிலம்பட்டி 50மிமீ, அருப்புக்கோட்டை, ஏற்காடு 40 மிமீ, தளி, தேவாலா, பரூர், திருமங்கலம், மேலூர் 30 மிமீ, கமுதி, பென்னாகரம், தேன்கனிக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், சங்கராபுரம், சாத்தூர் 20மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது சற்று வலுவடைந்து ஆந்திராவின் கடற்கரைக்கு அப்பால், மேற்கு மத்திய வங்கக் கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

Related Stories: