வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்திற்கு சென்னை மக்களிடம் வரவேற்பு இல்லை : பெரம்பலூரில் 100 சதவீதம் வெற்றி

சென்னை: வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்துக்கு சென்னை மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்பது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 3.71 கோடி பேர், தங்கள் பெயர், விலாசம், போட்டோ உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்று கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் தாலுகா அலுவலகம் சென்று வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்துள்ளனர். வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் செப்டம்பர் 30ம் தேதி வரை என்பது, தற்போது நவம்பர் 18ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதுவரை வாக்காளர்கள், தங்கள் பெயரை சரி செய்வது, திருத்தம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின்படி, தமிழகம் முழுவதும் 3 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 464 பேர் இதுவரை சரி பார்த்துள்ளனர். இது 61.87 சதவீதம். பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் பேரும், அரியலூர் மாவட்டத்தில் 98 சதவீதம் பேரும் தங்கள் விவரங்களை சரிபார்த்துள்ளனர். மேலும் மதுரை 45.84 சதவீதம், காஞ்சிபுரம் 48.26 சதவீதம், திருவள்ளூர் 51.08 சதவீதம், திருநெல்வேலி 50.80 சதவீதம், வேலூர் 52.76 சதவீதம், கோவை 59.84 சதவீதம், சேலம் 60.15 சதவீதம், திருச்சி 70.10 சதவீதம், தூத்துக்குடி 78.98 சதவீதம் பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை சரியாக உள்ளதா என்று பார்த்துள்ளனர்.

மிகவும் குறைவாக சென்னையில் 18.53 சதவீதம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். சென்னையில் பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று இந்த பணியில் ஈடுபடுகின்றனர். மற்ற ஊர்களில் ஆசிரியர்களுடன் அங்கன்வாடி ஊழியர்களும் சிறப்பாக செய்கிறார்கள். சென்னையில் போதிய வரவேற்பு இல்லை. சென்னையில் பல வீடுகளில் பகல் நேரங்களில் வேலைக்கு சென்று விடுகிறார்கள். அதனால் அவர்கள் இணையதளம் மூலம், செல்போன் மூலமே இந்த பணிகளை செய்ய முன்வர வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிட்டால், வாக்குப்பதிவு நாளன்று தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தேர்தல் ஆணையம் மீது குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: