சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு இலங்கை, துபாயிலிருந்து 1.8 கோடி மதிப்பு தங்கம் கடத்தல்: 2 இலங்கை பெண்கள் உட்பட 7 பேர் கைது

சென்னை: இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த ஆனந்தா ரீகன் (37), மேரி சந்திரகலா (41) என்ற இரண்டு பெண்களை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அவர்கள் தங்கள் புடவை மடிப்புகளுக்குள் கொத்துக் கொத்தாக புத்தம் புதிய தங்க செயின்கள் வைத்திருந்தனர். அதன் மதிப்பு 25.5 லட்சம். மேலும் துபாயில் இருந்து டெல்லிக்கு தங்கம் வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து நேற்று பகல் 12.30 மணிக்கு ஏர் இண்டியா விமானத்தில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரஜாக் அகமது (50) என்பவரின் சூட்கேசின் ரகசிய அறையில் 20 தங்க கட்டிகள் இருந்தன. அதன் மொத்த எடை 2 கிலோ 360 கிராம், அதன் மதிப்பு 93.6 லட்சம்.

எனவே அவரை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மத்துல்லா (40), நைனார் முகமது (36), முஸ்தபா (27), முகமது நூர்தீன் (25) ஆகியோரிடம் சோதனை நடந்தது. அப்போது அவர்களது உள்ளாடைகளுக்குள் 2 தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு 60.9 லட்சம். விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் ₹1.8 கோடி மதிப்புடைய நான்கரை கிலோ தங்கம் சிக்கியது. இதில் இரண்டு இலங்கை பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: