லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய 6 பேர் டம்மி பதவிக்கு தூக்கியடிப்பு

* பதிவு பணி இல்லை

* பதிவுத்துறை ஐஜி உத்தரவு

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய 6 பேரை பதிவு இல்லாத பணிக்கு மாற்றம் செய்து பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் மட்டுமின்றி திருமண பதிவும் நடக்கிறது. சில பதிவுகளை மேற்ெகாள்ள சார்பதிவாளர்கள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.  குறிப்பாக, ₹50 லட்சம் மதிப்பிலான சொத்து என்றால் ₹25 ஆயிரம் வரையும், திருமண பதிவுக்கு ₹2,500 வரையும் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல்வேறு புகார்களின் அடிப்படையில் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ரெய்டு நடத்த அனுமதி கேட்டனர். அதற்கு ஐஜி அலுவலகம் அனுமதி வழங்கியது. இதனால் அதிக பதிவு, லஞ்சம் அதிகமாக வாங்கும் அலுவலகங்கள் பட்டியல் தயாரித்து லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தினர். அதில் பலர் சிக்கினர்.

ஊழல் துறையின் அறிக்கையின் போரில், தற்போது பதிவுப்பணியில் பணிபுரிந்து வந்த சார்பதிவாளர்கள் சிலரை பதிவு இல்லாத பணிக்கு மாற்றம் செய்து பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அவினாசி சார்பதிவாளர் விமலாதேவி புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகம் (வழிகாட்டி), சிதம்பரம் இணை 1ம் எண் சார்பதிவாளர் மணிவண்ணன், ஊட்டி மாவட்ட பதிவாளர் அலுவலகம் (சீட்டு மற்றும் சங்கம்), கன்னியாகுமரி 1ம் எண் இணை  சார்பதிவாளர் பரமார்த்தலிங்கம் மதுரை டிஐஜி அலுவலகம் (நிர்வாகம்), மதுரை தெற்கு மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) நெல்லை மாவட்ட பதிவாளர் அலுவலகம் (சீட்டு மற்றும் சங்கம்), அயோத்தியா பட்டினம் சார்பதிவாளர் தனசேகரன் நெல்லை மாவட்ட பதிவாளர் அலுவலகம் (வழிகாட்டி),  சாத்தூர் சார்பதிவாளர் லோகநாதன் மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் அலுவலகம் (வழிகாட்டி)  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய மாவட்ட பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்பேரில் அவர்கள் விரைவில் பதிவு இல்லாத பணிக்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பதிவு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு, கையும் களவுமாக சிக்கிய பல மாவட்ட பதிவாளர்கள், இன்னும் பத்திரப்பதிவுத்துறையில் உள்ளனர். அவர்கள், கோட்டையில் செல்வாக்காக இருக்கும் ஒரு அமைச்சர் மூலம் பதவியை தக்க வைத்து வருகின்றனர். அவர்கள் மீதும் பத்திரப்பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை எடுப்பார் என்றும் பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: