மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்

* அதிகாரிகள் தார்மீக ஆதரவு

* பணபரிவர்த்தனை, ‘செக்’ பரிவர்த்தனை முடங்கும் அபாயம்

சென்னை: மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றப்படும் என்று கடந்த மாதம் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதற்கு வங்கி அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் உள்பட  அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கிகள் இணைப்பை கண்டித்து கடந்த மாதம் 26ம் தேதி, 27ம் தேதி ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி அதிகாரிகள் சங்கத்தினர்  அறிவித்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் வங்கிகள் இணைப்பை கண்டித்து அக்டோபர் 22ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி  ஊழியர்கள் சங்கம்(ஏஐபிஇஏ), இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு(பி.இ.எப்.ஐ) அறிவித்திருந்தன. அதன்படி வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 40,000 வங்கி ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் சங்கங்களும் தார்மீக ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதனால், இன்று வங்கி சேவை பாதிக்கப்படும். இதற்கு மத்திய அரசு தான் முழு பொறுப்பு. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை 10.30 மணிக்கு வங்கி ஊழியர்கள்  பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஆர்ப்பாட்டம் முடிவில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு இந்த போராட்டத்திற்கு பிறகும் இணைப்பு நடவடிக்கையை கைவிடாவிட்டால் அடுத்து தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பு  வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.வங்கி ஊழியர்கள் மட்டும் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த போராட்டத்துக்கு வங்கி அதிகாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், இன்று வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பணபரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களில் வங்கி  ஊழியர்கள் தான் பணத்தை நிரப்புவது வழக்கம். வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் ஏடிஎம் சேவையும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது.

Related Stories: