திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் 17 மாவட்டங்களில் கனமழை

* ஏரி, குளம், நிரம்புகின்றன * ஊட்டி, கொடைக்கானலில் நிலச்சரிவு * திருவள்ளூரில் மழை கொட்டும்

Advertising
Advertising

சென்னை: வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் வரை பெய்யும். இந்த காலங்களில் வங்கக் கடல் பகுதியில் பல்வேறு காற்றழுத்தங்கள், புயல்கள் உருவாகி தமிழகத்துக்கு நல்ல  மழையை கொடுக்கும். இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. இது தற்போது மேலும் வலுப்பெற்று தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை  பெய்து வருகிறது. இந்த பருவ மழையின் தொடக்கமே இயல்பு மழை பெய்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. அதனால், இந்த பருவ மழை காலங்களில், அதிக அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் மழை நீர் வடிந்து செல்லவும், வெள்ள பாதிப்புகளை சமாளிக்கவும், புயல் முன்னெச்சரிக்ைக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு தரப்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட  நிர்வாகங்கள் பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன. அதே மழை நீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பல்வேறுஇடங்களில் தாமாக முன்வந்து நீர் நிலைகளை ஆழப்படுத்தியும், நீர் சேமிப்புக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதேபோல நீர் பிடிப்புகளில் பெய்யும் மழையால் கிடைக்கும் நீர் ஏரி, குளங்களுக்கு வந்து சேரும் வரையில் கால்வாய்களை சரி  செய்தும் வைத்துள்ளனர். பல இடங்களில், ஏரிகள் தூர்வாரவில்லை, குளங்களை சீர் படுத்தவில்லை, நீர் வழித்தடங்களை சரி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.

இதனால் இந்த ஆண்டு மழையின் காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 இந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் பெய்து வரும் மழையின் தொடர்ச்சியாக தற்போது வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதே நேரத்தில் அரபிக் கடலின் மத்திய பகுதியில் நேற்று முன்தினம் தோன்றிய வெற்றிடம்  காரணமாக அங்கு புயல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரபிக் கடல் மற்றும் தரைப்பகுதியில் உள்ள ஈரப்பதம் உள்ள காற்று அரபிக் கடல் பகுதிக்கு உறிஞ்சப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக குழித்துறையில் நேற்று 140 மிமீ மழை பெய்துள்ளது. பெரிய நாயக்கன் பாளையம் 120மிமீ, மேட்டுப்பாளையம் 90 மிமீ, குலசேகரபட்டினம்  80மிமீ, வால்பாறை 70மிமீ, அரவக்குறிச்சி, ஆழியாறு, பாம்பன், கடலாடி, தக்கலை, சென்னை விமான நிலையம், தென்காசி, கோத்தகிரி, பொள்ளாச்சி, வேடச்சந்தூர், 60 மிமீ, ஊத்தங்கரை, சிதம்பரம், ரமேஸ்வரம், கோவை, போடி நாயக்கனூர்,  குன்னூர் 50மிமீ, தாம்பரம், திருத்துறைப்பூண்டி, சீர்காழி, மாமல்லபுரம், வட சென்னை, கொளப்பாக்கம் 40மிமீ மழை பெய்துள்ளது.

 ஊட்டி, கொடைக்கானலில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபோல, பல மாவட்டங்களில் அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி ெகாண்டிருக்கின்றன. திண்டுக்கல், தேனி உட்பட சில மாவட்டங்களில்  வெள்ளம் காணப்படுகிறது.  சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்றுசுழற்சியும், தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் உருவாகியுள்ளது. அத்துடன் வங்கக் கடலில் இலங்கை  வரையில் குறைந்த காற்றழுத்தம் உருவாவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று இந்தோனேசியா பகுதியில் இருந்து நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வருவதற்கு இரண்டு அல்லது மூன்று  நாட்கள் ஆகும். அது வரை தமிழகத்தில் நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் இடங்களாக இந்திய வானிலை மையம் கண்டறிந்து அந்த இடங்களுக்கு சிவப்பு நிற(ரெட் அலர்ட்) எச்சரிக்கை கொடுத்துள்ளது.

அதேபோல தமிழகத்திலும் எந்தெந்த இடங்களில் மிக பலத்த மழை, மிக கனமழை, கனமழை பெய்யும் இடங்கள் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆகியவை, கணித்துள்ளன.  அந்த  இடங்கள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். இதன் அளவு 21 செமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் இடங்கள் என்று  கணித்துள்ளனர். ஆரஞ்சு: மிக கனமழை பெய்யும் இடங்களாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ஆகிய இடங்களில் மிக கனமழையை குறிக்கும் ஆரஞ்சு நிறம் குறிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள்:  திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இதற்காக மேற்கண்ட  இடங்கள் மஞ்சள் நிறம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களில் சிவப்பு நிறமிடப்பட்டுள்ள இடங்களில் மிக பலத்த மழை என்பது 210 மிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு நிகழ்வு எப்போதாவது சில நேரங்களில் தான் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பரவலாகவே நல்ல மழை பெய்யும். இதையடுத்து, தமிழகத்தில் அதிக மழை பெய்யும் இடங்கள் என்று எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மழை நீர் அதிகமாக தேங்கும்  இடங்கள், வெள்ள அபாயம் உள்ள இடங்களில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் வேண்டிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மலைப் பிரதேசங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இன்றும் மலைப் பகுதியில் அதிக அளவில் மழை பெய்யும் என்பதால் அந்த இடங்களில் தொடர் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகும் சூழல் உருவாகியுள்ளதால் தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடலில் மணிக்கு 50 கிமீ வேகம் முதல் 65 கிமீ  வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடலில் சீற்றம் அதிகம் காணப்படும்.

5 கேரள மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’

கேரளாவில்  வடகிழக்கு பருவமழை தீவிரம்  அடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக  திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு  மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.  அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலான  பகுதிகளில் பலத்த மழை பெய்யும்  என்று  திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி  மையம் அறிவித்துள்ளது. இன்று இடுக்கி,  திருச்சூர், பாலக்காடு,  மலப்புரம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ரெட்  அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா,   கோட்டயம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்சு  அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை   காரணமாக எர்ணாகுளம்  ஸ்தம்பித்துள்ளது.

கொடைக்கானலில்பயணிகளுக்கு தடை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில்  உள்ள தூண் பாறை, பைன் பாரஸ்ட், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய பகுதிகளுக்கு  இன்றும், நாளையும் (அக். 22, 23) சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை   விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பேரிஜம் வனச்சரக ரேஞ்சர் கிருஷ்ணசாமி  தெரிவித்துள்ளார்.

3 வகை அலர்ட்

வானிலை ஆய்வுமைய கணிப்பின்படி தமிழகத்தில் அதிக மழை பெய்யும் இடங்கள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற நிறங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

* மஞ்சள் நிறத்தின்படி, 64.5  மிமீ முதல் 115.5 மிமீ(7-11செமீ) மழை பெய்யும்.

* ஆரஞ்சு நிறத்தின்படி, 115.6 மிமீ முதல் 204.4 மிமீ(12-20 செமீ) வரை மழை பெய்யும்.

* சிவப்பு நிறத்தின்படி, 204.4 மிமீ முதல் அதற்கும் அதிமாக (21 செ.மீ மேல்) மழை பெய்யும்.

கடந்த 2015ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 250 மிமீ (25 செமீ) அதிகமாக மழை பெய்த காரணத்தால், ெசம்பரம் பாக்கம் ஏரி ஒரேநாள் இரவில் 90 ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு இன்று  (22.10.2019) 21 செமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: