விருதுகளை குவித்துவரும் வெற்றி நாயகி காமன்வெல்த் யோகா போட்டியில் சாதிக்க துடிக்கும் கடையம் மாணவி...கைகொடுத்தால் `தங்க பதக்கம்’ நிச்சயம்

கடையம்: நெல்லை மாவட்டம் கடையம் அருகே 13 வயது சிறுமி யோகாவில் உலக அளவில் சாதனைகள் படைத்து வருகிறார். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அந்த மாணவி பல்வேறு விருதுகள், பரிசுகள் வாங்கி  குவித்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் கடையம் அடுத்துள்ள ரவணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முகம்மது நஸிருத்தீன் - ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் மூத்த மகள் 13 வயதுடைய மிஸ்பா நூருல்  ஹபிபா. இவர் தென்னகத்தின் ஸ்பா என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம் செய்யது ஹில் வியூ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் படித்தார். இவருக்கு 2ம் வகுப்பிலிருந்தே  யோகாவில் அதீத பிரியம். இவருக்கு குற்றாலம் குடியிருப்பை சேர்ந்த யோகா ஆசிரியர் குரு கண்ணன் பயிற்சி அளித்து வருகிறார்.

Advertising
Advertising

யோகா சிறப்பு நிலை பிரிவில் மாவட்ட மாநில மற்றும் சர்வதேச அளவில் முதல்  இடம் பிடித்து வருகிறார். அமெச்சூர் ஆசியன் யோகா விளையாட்டு பெடரேஷன் சார்பில் கடந்த 2016 மற்றும் 2018 ஆகிய வருடங்களில்  ஆசிய அளவில் தாய்லாந்தில் நடைபெற்ற யோகா போட்டிகளில் இருமுறை தங்கப்பதக்கம் பெற்று யோகா காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இதே அமைப்பின் மூலம் விரைவில் நடைபெறும்  காமன்வெல்த் போட்டிக்கு இவர் தேர்வாகியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூரில் வைத்து ஒளிரவன் யோகா அகடாமி சார்பில் தென்னிந்திய அளவில் 72 விநாடி மற்றும் 72 நிமிடம் நடத்தப்பட்ட கேமல் போஸ், தொடர்  யோகா ஆகிய இரண்டு பிரிவில் தேசிய சாதனை படைத்தார். இவருக்கு  குளோபல் ரிக்கார்ட் அன்ட் ரிசர்ச் பவுண்டேசன் சார்பில் தேசிய சாதனை சான்றிதழ் வழங்கபட்டது.

வாழும் கலையின்  யோகா சார்பில் குருஜி ரவிசங்கர்ஜி ஆசியுடன் திருப்பூரில், கடந்த மே மாதம் ஒரே மேடையில் 1000 நபர்கள் இணைந்து வீரபத்திர ஆசனத்தில் 3 நிமிடங்கள் உடல் அசைவு இல்லாமல் நின்று  கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தென்மாவட்டத்திலிருந்து  மாணவி மிஸ்பா கலந்துகொண்டு வீரபத்திர ஆசன நிலையில் 3 நிமிடம் நின்று இவர் பங்களிப்பை மேற்கொண்டார்.  இதன்மூலம் மிஸ்பாவிற்கு கின்னஸ் உலக சாதனை முயற்சி பங்கேற்பு சான்றிதழ் வாழும் கலை அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது.  மத்திய அரசு நேரு யுவகேந்திரா சார்பில் சாதனையாளர் விருதும், யோகா நட்சத்திர விருது, யோகா பாரதி விருது, நாட்டு நலப்பணி திட்ட சாதனையாளர் விருது மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல  பதக்கங்களும், விருதுகளும் வாங்கி குவித்துள்ளார்.

நெல்லை தொகுதி எம்பி, ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ, நெல்லை கலெக்டர், விளையாட்டு துறை அதிகாரிகள் ஆகியோர் மிஸ்பாவை பாராட்டினர். மேலும் தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிஸ்பாவை அழைத்து பாராட்டும் தெரிவித்தார்.இதுபோன்று மிஸ்பா யோகா மற்றும் ஸ்கேட்டிங் மூலம் தலைவர்கள் பிறந்த நாள், முக்கிய தினங்கள் ஆகிய நாட்களில் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டெங்கு ஒழிப்பு, இயற்கை வளம்  பாதுகாத்தல், வனவிலங்குகள் பாதுகாத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, சிறுமிகள் பாலியல் தொந்தரவிற்கு எதிராகவும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும் ஆணிப்படுக்கையில் அமர்ந்து விழிப்புணர்வு  ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார்.

மாணவி மிஸ்பா கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்று எனது தாய் நாடான இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே என் லட்சியம். இதற்காக தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறேன்.  வெளிநாட்டில் நடக்கும் காமன்வெல்த் போட்டிக்கு செல்வதற்கு போதிய பண வசதியில்லாமல் கஷ்டபடுகிறேன். யோகா செய்வதன் மூலம் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக உள்ளேன்.  தொடர்ந்து யோகா மற்றும் ஸ்கேட்டிங் மூலம் மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றார்.

மோடிக்கு கடிதம்:  பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தவறான பாதை சென்றால் அவர்களை நல் நெறிப்படுத்தும் வண்ணம் உடல் ஆரோக்கியம் பெற்று கல்வி மற்றும் பொது நலனில் அக்கறைகளை மேற்கொள்ளும்  விதம் யோகா தினத்தை  இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி யோகாவை சிறப்பித்து  கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. யோகாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் தங்கனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று மேலும் பல போட்டிகளில் தங்களது ஆசிர்வாதத்துடன் வெற்றி பெற்று  தங்களுக்கும் நம் தாய் நாட்டிற்கும் பெருமை  சேர்க்க வேண்டும் என மோடிக்கு மாணவி கடிதம் அனுப்பியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி: கூலித் தொழிலாளி மகளான  மிஸ்பாவை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஆயிரக்கணக்கில் பணத்தை திரட்டுவது என்பது  இயலாத காரியம். ஏற்கனவே தாய்லாந்து சென்றதற்கு ரூ. 2 லட்சம் அளவில்  கடனுக்கு  பணத்தை வாங்கி அனுப்பியுள்ளார். இதுவரை அந்த கடனுக்கு வட்டிதான்  கட்டி வருகிறார். தற்போது நடைபெற உள்ள காமன் வெல்த் போட்டிக்கு அனுப்பும்  நிலையில் அவரது குடும்ப சூழ்நிலை இல்லை. அரசு மற்றும்  தனியார் அமைப்புகளின்  பொருளாதார உதவியை நாடி வருகிறார்.

Related Stories: