தீபாவளிக்கு மதுபானங்கள் 350 கோடி விற்க ‘டார்கெட்’ நிர்ணயம்: டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு 350 கோடி மதுவிற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் 2017ம் ஆண்டு விற்பனையை விட 34.5 சதவீதம் விற்பனை அதிகரித்து 602 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலேயே அதிகமான விற்பனை நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இந்த ஆண்டு 350 கோடி தீபாவளிக்கு மதுவிற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரங்கள் கூறியதாவது: இந்த ஆண்டு மதுவிற்பனை சற்று மட்டுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை அன்று 60 முதல் 80 கோடிக்கும், சனிக்கிழமை 140 கோடியும், தீபாவளி அன்று (ஞாயிற்றுக்கிழமை) 150 கோடிக்கும் என மொத்தம் 3 நாட்களில் ₹350 கோடி மதுவிற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மந்தநிலை காரணமாக எதிர்பார்த்த விற்பனை நடைபெறுமா அல்லது விற்பனை குறையுமா என்பது தீபாவளி பண்டிகைக்கு பிறகு தான் தெரியும்.

Related Stories: