தீபாவளி பண்டிகை விற்பனை விறுவிறுப்பு தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: தி.நகர், புரசை, வண்ணை மக்கள் வெள்ளத்தில் திக்கு முக்காடியது

சென்னை: தீபாவளிக்கு பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் நேற்று கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணை போன்ற பகுதிகள் நேற்று மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தீபாவளி பண்டிகை வருகிற 27ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேறு. இதனால் தமிழகம் முழுவதும் நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் கடை வீதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் நேற்று காலை முதலே சென்னையை நோக்கி படையெடுத்தனர். அது மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் சென்னைக்கு வர தொடங்கினர். இதனால் வர்த்தக பகுதியான சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் காலை நேரத்திலேயே வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை முதல் ெசன்னை முழுவதும் குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்பட்டது. எனினும் பொருட்களை வாங்குவதற்காக பஜார் வீதிகளுக்கு மக்கள் வந்தனர்.

அவர்கள் தங்களுக்கு தேவையான பேன்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், வேஸ்டி, சேலை உள்ளிட்ட துணிமணிகளை வாங்கி சென்றனர். அது மட்டுமல்லாமல் தீபாவளிக்கு என்று புதுப்புது டிசைன்களில் ஜவுளி பொருட்கள் விற்பனைக்காக வந்திருந்தன. அவற்றை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வாங்கி சென்றனர். மாலை 4 மணிக்கு மேல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் குலுங்கின. தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் ஆங்காங்கே உயர் கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணித்தனர். ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தியாகராயநகரில் மட்டும் கண்காணிப்புக்காக ஏற்கனவே 1200 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக 100 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆளில்லா பறக்கும் குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிந்தது. மேலும் தி.நகர் போத்திஸ், ரங்கநாதன் தெரு மற்றும் மாம்பலம் ரயில் நிலையம் அருகில் என 3 இடங்களில்  “Face Tagger Camera” எனப்படும் புதிய தொழில் நுட்பத்துடன் கேமராக்கள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறமும் கயிறுகளை கட்டி கூட்டத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். தீபாவளி நெருங்கி வருவதால் வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகமான மக்கள் வர  வாய்ப்புள்ளது. இதனால், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த போலீசார் முடிவு  செய்தனர்.

Related Stories: