மானசரோவர், முக்திநாத் யாத்திரை சென்ற பக்தர்களுக்கு மானியம் தர மறுப்பு: செலவை கட்டுப்படுத்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறதா?

சென்னை: மானசரோவர், முக்திநாத் யாத்திரை சென்ற பக்தர்களுக்கு மானியம் தர உரிய ஆவணங்கள் தந்தாலும் விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டு வருவது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  தமிழக அரசு சார்பில் சீனாவில் உள்ள மானசோருவருக்கு செல்ல பக்தர் ஒருவருக்கு ₹40 ஆயிரம் மானியமும், நேபாளத்தில் உள்ள முக்திநாத் புனித யாத்திரை செல்ல பக்தர் ஒருவருக்கு ₹10 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் ஒவ்வொரு ஆண்டும் 250 பேருக்கு தான் வழங்கப்பட்டு வந்தது. இதனால், விண்ணப்பித்த பலருக்கு மானியம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2017ல் 250ல் இருந்து 500 ஆக சீனா மற்றும் நேபாளம் யாத்திரை செல்லும் பயனாளிகளில் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து சீனா, நேபாளம் யாத்திரை சென்ற பலரும் மானியம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர். இருப்பினும் மானசரோவர் சென்ற 326 பேருக்கும், முக்திநாத் சென்ற 178 பேருக்கு மட்டுமே மானியம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2018-19ம் நிதியாண்டிலும் மானியம் பெற ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். அதிலும், பலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், இந்தாண்டும் குறைவான நபர்களுக்கே மானியம் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக சீனா சென்ற 250 பேருக்கும், முக்திநாத் சென்ற 100க்கு பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் யாத்திரை செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும், தொடர்ந்து விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் நிராகரிப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மானியம் பெறுபவர்களால் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் அதை கட்டுபடுத்த மானியம் தருவது மறுக்கப்படுகிறதா என்ற கேள்வியை பக்தர்கள் எழுப்பியுள்ளனர்.

Related Stories: