மெட்ரோ ரயில் நிலைய தூண்களில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க 2 குழுக்கள் அமைப்பு : 10 பேர் மீது போலீசில் புகார்

சென்னை: மெட்ரோ ரயில் நிலைய தூண்களில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க 2 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடையை மீறி போஸ்டர் ஒட்டிய 10 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில் பச்சை மற்றும் நீள வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. தற்போது, வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் 9 கி.மீ தூரத்திற்கு முதல் வழித்தட நீட்டிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களின் தூண்கள் மற்றும் சுவர்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு வந்தது. இதுகுறித்த புகார்கள் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்கு வந்தது. இது மெட்ரோ ரயில் நிலையங்களின் அழகிற்கு குந்தகம் விளைவிப்பதாக கருதப்பட்டது. எனவே, மெட்ரோ ரயில் நிலைய தூண்களில் போஸ்டர் ஒட்ட கடந்த 2017ம் ஆண்டு நிர்வாகம் தடை விதித்தது. ஆனால், இந்த தடையை மீறி மெட்ரோ ரயில் நிலைய கட்டிடங்கள் மற்றும் தூண்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தன. எனவே, கடந்த மாதம் ஒரு புதிய அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டது.

அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் தூண்களில் தடையை மீறி போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 1,000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் நிர்வாகம் எச்சரித்தது. ஆனால், இதையும் மீறி பலர் போஸ்டர்கள் ஒட்டி வந்தனர். இதை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் 2 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தடையை மீறி போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இரண்டு சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இணை பொது மேலாளர் தலைமையிலான இந்த குழுவில் ஒரு காவலர், இரண்டு மெட்ரோ ரயில் அதிகாரிகள் இருப்பர். பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் அதிகமாக போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது.

எனவே, நாள்தோறும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது, தடையை மீறி போஸ்டர்கள் இருந்தால் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்படும். இதுவரையில் தடையை மீறி போஸ்டர் ஒட்டியதாக வடபழனி, அண்ணாநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் வழித்தட திட்ட நீட்டிப்பு பணிகள் நடந்து வரும் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரையிலும் தீவிர ரோந்து பணி நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: