குடிநீர் வாரிய லாரி தண்ணீர் கட்டணம் திடீர் உயர்வு : நிறுத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் கட்டணம் மூலம் வழங்கப்படும் லாரி குடிநீர் விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, வீடுகளுக்கு வழங்கப்படும் லாரி தண்ணீரின் கட்டணத்தை மட்டும் நிறுத்தி வைப்பது குறித்து குடிநீர் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. பருவமழை பொய்த்ததால் சென்னையில் இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி நிலவியது. தண்ணீருக்காக மக்கள் தவியாய் தவித்தனர். பலர் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய பரிதாபத்துக்கு தள்ளப்பட்டனர். நிலத்தடி நீர்மட்டமும் அடியோடு குறைந்ததால் வீட்டு தேவைக்கான தண்ணீர் கிடைக்காமல் லாரி தண்ணீருக்காக மணிக்கணக்கில் தெருக்களில் காத்திருந்தனர். தனியார் லாரி தண்ணீர் விலையோ எட்டாத உயரத்தில் இருந்தது. இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியத்திடம் தண்ணீர் லாரிக்காக முன்பதிவு செய்யும் மக்கள் நீண்ட நாள் காத்திருக்கும் சூழல் நிலவியது. இதனால் குடிநீர் வாரிய தண்ணீர் லாரிகளின் நடைகளை 11 ஆயிரம் என்ற அளவுக்கு அதிகரித்தும் பிரச்னை தீரவில்லை. அதிலும் பல்வேறு குளறுபடிகள் நிலவியது. நீர் நிரப்பும் நிலையங்கள் பல ஆளுங்கட்சியினரின் பிடிகளுக்கு சென்றது. இதனால் முன்பதிவு செய்தவர்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை குடிநீர் வாரியம் புதிய திட்டம் ஒன்றை கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. அதன்படி, சென்னை குடிநீர் வாரியத்திடம் தண்ணீர் லாரிக்கு முன்பதிவு செய்துவிட்டு இனி நீண்ட நாட்கள் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் ‘‘டயல் பார் வாட்டர் 2.0’’ என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையின்படி லாரி பதிவு செய்த நாளில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஏதாவது ஒருநாளில் குடிநீர் பெறும் வகையில் இத்திட்டம் முறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், குடிநீர் வாரிய லாரி தண்ணீர் கட்டணம் 5 சதவீதம் அளவுக்கு திடீரென உயர்த்தப்பட்டது. அதற்கான அறிவிப்பு எதுவும் முறையாக வெளியிடப்படாத நிலையில் திடீர் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வீடுகளுக்கு வழங்கப்படும் லாரி தண்ணீர் கட்டணத்தில் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் கட்டண உயர்வு குறித்து சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

லாரிகளுக்கான டீசல் விலை உயர்வு, பராமரிப்பு உள்ளிட்டவைகளை கணக்கிட்டு ஆண்டுதோறும் 5 சதவீதம் கட்டணத்தில் விலை ஏற்றுவது வழக்கமான ஒன்றுதான். தற்போது ஏற்றப்பட்ட இந்த 5 சதவீத கட்டண உயர்வுக்கும், வணிக ரீதியான லாரி தண்ணீருக்கு 10 சதவீத கட்டண உயர்வுக்கும், கடந்த 2018ம் ஆண்டே அனுமதி வாங்கப்பட்டு விட்டது.

இது சம்பந்தமான கட்டண உயர்வு அப்போதே சாப்ட்வேரில் அப்டேட் செய்யப்பட்டும் விட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சென்னையில் நிலவிய குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு கட்டண உயர்வு அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தோம். தற்போது அரை நிதியாண்டு தொடக்கமாக இந்த மாதம் அந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, வீடுகளுக்கு வழங்கக்கூடிய 3000, 6000 மற்றும் 9000 லிட்டர்கள் கொண்ட லாரி தண்ணீர் கட்டணத்தில் 5 சதவீதம் ஏற்றப்பட்டது. அது ஏற்கனவே 2018ம் ஆண்டே அனுமதி வாங்கி அமல்படுத்தப்பட்ட ஒன்று. கடந்த ஒரு வாரமாக இந்த கட்டண உயர்வுபடி தண்ணீர் வழங்கப்பட்டதால்தான் திடீர் கட்டண உயர்வு போல் தோன்றியுள்ளது. ஆனால், அப்படி அல்ல.

இது ஆண்டுதோறும் ஏற்றப்படக்கூடிய 5 சதவீத கட்டண உயர்வுதான். தற்போதைய சூழ்நிலையில், வீடுகளுக்கு வழங்கக்கூடிய லாரி தண்ணீரின் 5 சதவீத கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடரலாமா அல்லது கட்டணத்தை உயர்த்தலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் தலைமையில் விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதில் இறுதியான முடிவு எடுக்கப்படும். அதுவரை வழக்கமான கட்டணத்திலே தண்ணீர் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வணிக ரீதியாக வழங்கப்படும் லாரி தண்ணீரின் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது தொடரும். அதில் எந்தவித மாற்றமுமில்லை. வணிக ரீதியாக உயர்த்தப்பட்ட கட்டணத்தின்படி, 3 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீருக்கு ரூ.500 என்றும், 6 ஆயிரம் லிட்டருக்கு ரூ.735 என்றும், 9ஆயிரம் லிட்டருக்கு ரூ.1050 எனவும், 12ஆயிரம் லிட்டருக்கு ரூ.1400 எனவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: